தர்மபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரைசிங் யூத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் இளைஞரணி தலைவர் லெனின் பிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த லெனின் பிரசாத்,
“பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் நாகரிகம் இல்லாமல் தலைவர்களைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். ஜனநாயக வரம்பை மீறி தனி மனித தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இதை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரே சுட்டிக் காட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அநாகரிகமாகப் பேசி வருகிறார். நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கின்றோம். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஒரு தலை பட்சமாக செயல்படாது. எல்லோருக்கும் பொதுவான வகையில் தான் இருப்போம் என தெரிவித்தார்.