ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

செங்கல் சூளைக்கு மண் அள்ளிய டிராக்டர்கள் அதிரடியாக பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று, மண் அள்ளி செங்கல் சூளைக்கு கடத்தி சென்ற 4 டிராக்டர்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று, கண்மாய்களில் மண் அள்ளி சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு கடத்தப்படுவதாக விவசாயிகளிடம் இருந்து புகார்கள் எழுந்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய தனிப் படைகள் அமைத்து சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பாண்டி தலைமையிலான தனிப்படையினர் நேற்று (செப்.,20) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வன்னியம்பட்டி ரயில்வே கேட் அருகே உள்ள செங்கல் சூளையில் கண்மாய் மண் கொட்டிக் கொண்டிருந்த 4 டிராக்டர்களை பிடித்து, அனுமதி சீட்டை சோதித்த போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் இருந்து பிள்ளையார்குளம் வருவாய் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று மண் அள்ளி சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு கடத்தியது தெரியவந்தது. மண்ணுடன் இருந்த டிராக்டர்களையும் பறிமுதல் செய்த தனிப்படையினர், வருவாய் ஆய்வாளர் பரமசிவத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வாணியம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்