ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பு மேற்கு
தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழையால் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை 47 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையானது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகவும் கருதப்படுகிறது. இந்த அணையை நம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள கொடிக்குளம், பெரியகுளம், விராடசமுத்திரம், பூரிபாறைகுளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாயிகளுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த பத்து நாட்களில் 11 அடி நீர் மட்டம் உயர்ந்த தற்போது அணையின் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 50 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதன் காரணமாக இந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.