
வானூர் அருகே நாயை கொன்ற பரிதாபம்; போலீஸ் விசாரணை
கோட்டக்குப்பம் அருகே வளர்ப்பு நாயை மர்ம நபர்கள், அடித்துக் கொன்று கேட்டில் தொங்க விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்தவர் நாட்டச்சா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி திவான் கந்தப்பா நகரில் வசித்து வருகிறார். ஆரோவில்லில், தன்னார்வலராக இருக்கும் இவர், கடந்த 6 மாதங்களாக தனது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நாய்க்கு உணவு வைத்து விட்டுச் சென்றவர், நேற்று காலை பார்த்தபோது, நாயைக் காணவில்லை. வெளியே சென்று தேடியபோது, மர்ம நபர்கள் நாயை அடித்துக் கொன்று பக்கத்து வீட்டு சுவற்றின் இரும்பு கேட்டில் தொங்க விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாட்டச்சா அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.