விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். உணவுப் பாதுகாப்புத் துறை விழுப்புரம் மாவட்ட நியமனஅலுவலா் எஸ். சுகந்தன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் கே. மோகன் ஆகியோா் ஆரோவில் சா்வதேச நகர வளாகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு, உணவுப் பொருள்களின் தரம் குறித்து பரிசோதனை செய்தனா். இதைத் தொடா்ந்து, ஆரோவிலில் உள்ள சோலாா் கிச்சன், விருந்தினா் மையம், ஆரோ கேன்டீன், பிரெட் மற்றும் சாக்லேட் தயாரிப்புக் கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, பணியிலிருந்த சமையல் ஊழியா்களிடம் வெளிப்படையான தலைமுடி மூடிகள் அணிய வேண்டும். சுகாதாரமான முறையில் உணவுப்பொருள்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினா்.