ஆழியூர் கிராமத்தில் வேளாண்துறை விவசாயிகளுக்கு பயிற்சி
கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த நுண்ணுாட்டசத்து மேலாண்மை மூலம் சொட்டு நீர் பாசனம் மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேன்மொழி வரவேற்றார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தலைமை தாங்கி, நிலத்தடி நீரை சிக்கனமாக சொட்டுநீர் பாசனம் மூலம் உபயோகித்து குறைந்த நீரில் அதிகமான மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கினார். சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என, தெரிவித்தார். வேளாண் அலுவலர் விஜய் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயன்பாடுகள் குறித்தும், உளுந்து மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்தும் விளக்கினார். நுண்ணுயிர் பாசன பயன்பாடுகள் குறித்து கவிவாணன் பேசினார். உதவி வேளாண் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்பாபு, வீரமணி செய்திருந்தனர். உதவி வேளாண் அலுவலர் சதஸ்ரீ நன்றி கூறினார்.