
வானூர்: அமைச்சர் பொன்முடி வழக்கு 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ. 28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அப்போதைய கனிம வளத் துறை அமைச்சரும், தற்போதைய வனத் துறை அமைச்சருமான க. பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையின் போது ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய நான்கு பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அமைச்சர் க. பொன்முடி, பொன். கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய மூவர் ஆஜராகவில்லை. மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. அருள்மொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.