செங்கம் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்த ஏரி உபரி நீா்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இதனால், செங்கம் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறி வருகிறது. இந்த நீரானது துக்காப்பேட்டை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள வரதந்தாங்கல் ஏரிக்கு வருவதற்கான கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் செங்கம் தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனிடையே, செங்கம் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்திருந்த மழை நீரை தற்காலிகமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், தேசிய நெடுஞ்சாலை வழியாக உபரி நீா் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை அதிகரித்தால் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளை மீண்டும் மழை நீா் சூழும் நிலை உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செங்கம் ஏரி உபரி நீா் வரததந்தாங்கள் ஏரிக்கு செல்வதற்கான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், புதிதாக கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.