2-வது நாளாக தொடரும் பக்தர்களின் கிரிவலம்

76பார்த்தது
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு மலையே மகேசனாக விளங்குவதால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி புரட்டாசி மாதத்தில் 2 பவுர்ணமி தினங்கள் அமைந்தன. அதன்படி இம்மாதத்தின் இரண்டாவது பவுர்ணமி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 5. 38 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, சிறப்பு கட்டண தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை இன்றும் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :