விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு தலைமை அஞ்சலகத்தை அடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எல். பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தரவிமல்நாதன் தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ம. மணி, பொருளாளர் வி. எஸ். வீரப்பன், மாநகரத் தலைவர் பி. அறிவு உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டு போதிய தண்ணீர் இல்லாத நிலையில், மகசூல் பாதிக்கப்பட்டதால், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை உடன் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணத்தில் விடுபட்ட கிராமங்களையும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடுக்கான காலதாமதத்துக்கு உரிய வட்டியை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தால் தனியார் காப்பீடு நிறுவனங்கள் தான் பயன்பெறுகிறது. அரசே காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். பிரதமரின் உழவர் வெகுமதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் உதவித் தொகையை உயர்த்தி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.