தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் காட்டாற்றில் மணல் கடத்துதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் பேராவூரணி பகுதியில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி, எஸ்ஐ புகழேந்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது செங்கமங்கலம் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் இருந்து 8 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த கும்பலை போலீசார்
சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பகுதியை சேர்ந்த பாஸ்கர் (55), சுந்தர்ராஜ் (60), சுப்பிரமணியன் (44), கலைச் செல்வன்(43) ஆகியோரை கைது செய்ததுடன் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 8 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 8 ஜோடி மாடுகள் கும்பகோணம் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.