பேராவூரணி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆவணம் கடைவீதியில், மாரியம்மன்கோவில் செல்லும் வழியில், பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் கம்பிகள் பெயர்ந்து, பெரும் பள்ளமாக உள்ளது. பட்டுக்கோட்டை - அறந்தாங்கி முதன்மைச் சாலையான இந்தச் சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு பணிகளுக்காக தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள், இங்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் முக்கிய இடமாகவும் உள்ளது. சாலை பெரிய பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது, பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீர் சாலையில் நடந்து செல்வோர் மீது தெறித்து ஆடைகள் வீணாகும் நிலை உள்ளது. இதுகுறித்து, ஏ. வி. குமாரசாமி கூறுகையில், விபத்தை தவிர்க்கும் வகையில் சாலையில் உள்ள பள்ளத்தை மூடி, சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.