தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை பகுதியில், தனியார் குதிரையேற்ற பயிற்சிப் பள்ளியை ராஜ்குமார், தமிழரசன் ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சி மையம் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவதாக வருவாய் துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, கடந்த 10 ஆம் தேதி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், குதிரையேற்ற பயிற்சிப் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சிகளிலும், வருவாய்துறையிலும் எவ்வித அனுமதியும் பெறாமல், உரிமம் பெறாமல், பயிற்சிப் பள்ளியை நடத்தியது தெரிய வந்தது. இது குறித்து பயிற்சிப் பள்ளி நடத்தும் ராஜ்குமார், தமிழரசன் இருவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், சம்மந்தப்பட்ட துறை சார்ந்த உரிமங்களை ஒரு வாரகாலத்திற்குள் பெற்று தாக்கல் செய்ய வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டார். ஆனால், ஒரு வாரமாகியும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் குதிரையேற்ற பயிற்சிப் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அங்குள்ள 9 குதிரைகளையும் ஒரு வாரத்திற்குள் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர்.