தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை ரமணி என்பவர் தனது காதலனை திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் மதன்குமாரால் புதன்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தஞ்சாவூர் எம். பி முரசொலி, எம்எல்ஏக்கள் நா. அசோக்குமார் (பேராவூரணி), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோர் உயிரிழந்த ஆசிரியை வீட்டில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். புதன்கிழமை மாலை ஆசிரியை ரமணி உடல் எரியூட்டப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூபாய் 5 லட்சம் அறிவித்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் தந்தை முத்து, தாயார் முத்துராணி ஆகியோரிடம் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அப்போது தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் பேராவூரணி நா. அசோக்குமார், பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை உடன் இருந்தனர்.