தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியில் கொக்குகளை வலை வைத்து பிடித்த இரண்டு பேருக்கு வனத்துறை அபராதம் விதித்தது.
பட்டுக்கோட்டை வனச்சரகத்துக்குட்பட்ட மரக்காவலசை கிராமத்தில் 5 கொக்கு மற்றும் 7 மடையான் பறவைகளை உயிருடன் வலை வைத்து பிடித்த மரக்காவலசை கிராமத்தை சேர்ந்த பாலாஜி (55), தம்பிதுரை (43) ஆகியோரை பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர் பாரதிதாசன் ஆகியோர் பிடித்து விசாரணைக்காக பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகம் அழைத்து சென்றனர்.
பின்னர் மாவட்ட வன அலுவலர் கீர்த்திகா (பொறுப்பு) உத்தரவின்படி, 5 கொக்கு மற்றும் 7 மடையான் பறவைகள் வெண்டாக்கோட்டை ஏரியில் நல்ல நிலையில் பறக்க விடப்பட்டது. மேலும், வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.