சேலம்: பீரோ பட்டறை உரிமையாளர் கொலை; மேலும் ஒருவர் கைது
சேலம் மாவட்டம் வலசையூரை அடுத்த குப்பனூர் அருகே உள்ள வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). பீரோ பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த 8-ந்தேதி வலசையூர் அருகே காரில் வந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது. இது குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட காட்டூர் ஆனந்தன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்யா, மைத்துனர்கள் கார்த்தி, கணேஷ் உள்பட இதுவரை 18 பேரை போலீசார் கைது செய்தனர். சத்யா சேலம் பெண்கள் கிளை சிறையிலும் மற்ற 17 பேர் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக டி. பெருமாபாளையத்தை சேர்ந்த ராஜமுருகன் (34) என்ற மேலும் ஒருவரை இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று (நவம்பர் 15) கைது செய்தனர்.