சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் வருகிற 29-ந்தேதி புத்தக திருவிழா தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி மாநகராட்சி திடலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: - பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் 180 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பகங்கள், புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
தினமும் கருத்தரங்கம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. சேலம் மாவட்ட வரலாறு, பண்பாடு, கலாசாரம் உள்ளிட்ட புத்தக தொகுப்புகளும் இடம் பெறுகின்றன. மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.