தலைவாசல் அருகே 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் வடகுமரை ஊராட்சியில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் தேசிய வேலை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை கிராம மக்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் சுமார் 100 பேர் திரண்டு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணி விழுந்தான் தெற்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, காட்டுக்கொட்டை வருவாய் ஆய்வாளர் சரண்யா, தலைவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.