2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றிய அ. தி. மு. க. சார்பில் தம்மம்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கி பேசுகையில், கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்கு கடந்த அ. தி. மு. க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது: - இன்றைக்கு திரையுலகில் எத்தனையோ பேர் கட்சி தொடங்கலாம். ஆனால் எம். ஜி. ஆர். மன்றம் என தொடங்கி ஆட்சியை பிடித்தது அ. தி. மு. க. மட்டுமே. தி. மு. க. ஆட்சியில் மின்கட்டணம், பால் விலை உயர்வு, குடிநீர் தட்டுப்பாடு என மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார். 7. 5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியவர். அ. தி. மு. க. என்ற கப்பலை மாலுமியான எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை நேசிக்கின்றனர். எனவே வருகிற சட்டசபை தேர்தலில் மீண்டும் அ. தி. மு. க. ஆட்சியை பிடிக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்- அமைச்சராக வருவார். அதற்காக தொண்டர்களாகிய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றியை தேடித்தர வேண்டும். இவ்வாறு விஜயபாஸ்கர் பேசினார்.