தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் இன்று(செப்.5) காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகி கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
சரியான எடையில் தரமான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 100% ஒதுக்கீடு வழங்க வேண்டும். வேறு மாநில வெளி மாவட்ட, வெளி ஊர் குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏதுவாக 10% பொருட்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பொருட்கள் அனைத்தும் ஒரே காலத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பொதுமக்களிடம் ஆண்டுக்கு ஒரு முறை கருத்து கேட்டு அதன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.