சேலம்: கொங்கணாபுரம் சந்தையில் அதிகரித்த ஆடு, கோழி விற்பனை
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் புகழ் பெற்ற கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் வளர்ப்பு பசு, உழவு பணிகளுக்கான காளை மாடுகள், வண்டி மாடுகள் மற்றும் இறைச்சிக்கான ஆடுகள், நாட்டுக்கோழி, சண்டை சேவல் மற்றும் பந்தய புறா உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் இறைச்சி வியாபாரிகள் இந்த சந்தையில் இறைச்சிக்கான ஆடு மற்றும் நாட்டுக்கோழிகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்து வருகின்றனர். வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பபட இருப்பதால் இந்த சந்தையில் ஆடு, கோழி விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று(அக்.26) நடைபெற்ற கால்நடை சந்தையில் சுமார் 8 முதல் 10 கிலோ எடையுள்ள இறைச்சிக்கான ஆடு ரூ. 7, 200 முதல் ரூ. 9, 500 வரை விற்பனையானது. இதேபோல் நாட்டுக்கோழி (உயிருடன்) கிலோ ரூ. 450 முதல் ரூ. 580 வரை விற்பனையானது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும், மேச்சேரி, பெரும்பாலை, பென்னாகரம் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகத்தின் எல்லை பகுதியில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடு மற்றும் கோழிகளை வாங்கிச் சென்றனர்.