மக்கள் சந்திப்பு முகாமில் நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் மக்கள் சந்திப்பு சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். வருவாய் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சலவைப்பெட்டி, தையல் எந்திரம், வேளாண் கருவிகள் மற்றும் சுகாதாரத்துறை சார்பிலான மருந்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனை அமைச்சர் ராஜேந்திரன், டி. எம். செல்வகணபதி எம். பி. ஆகியோர் வழங்கினர். விழாவில் அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மலைவாழ் மக்களுக்கு சாதி, உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து உரிய அலுவலர்கள் மூலம் விசாரணைக்கு பிறகு தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதேபோன்று மகுடஞ்சாவடி, இடங்கண சாலை, சங்ககிரி ஆகிய இடங்களிலும் மக்கள் சந்திப்பு முகாம்கள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு எடப்பாடியில் 66 பேருக்கு ரூ. 1. 47 லட்சம் நலத்திட்ட உதவிகளையும், மகுடஞ்சாவடியில் 43 பேருக்கு ரூ. 69. 31 லட்சம் நலத்திட்ட உதவிகளையும், இடங்கண சாலையில் 33 பேருக்கு ரூ. 6. 53 லட்சம் நலத்திட்ட உதவிகளையும், சங்ககிரியில் 50 பேருக்கு ரூ. 65½ லட்சம் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.