கோவை: பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
கோவை, வடவள்ளி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கலைவாணி தம்பதியினர். கலைவாணி வீட்டின் அருகே உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை எப்பொழுதும் போல அவர் பள்ளிக்குச் சென்றிருக்க, அவருக்கு உணவு கொடுக்க அவருடைய கணவர் மதிய வேளையில் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது இவர்களின் வீட்டின் அருகே மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு, உள்ளே சென்றிருக்கிறார். உள்ளே இருந்து வந்த மற்றொரு நபர் இவரைத் தள்ளி விட்டு வெளியே ஓடி, வெளியே காத்திருந்த மற்றொரு மர்ம நபருடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர். ரமேஷால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இது குறித்து ரமேஷ் வடவள்ளி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மற்றும் 58 பவுன் நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்து, இரு சக்கர வாகனத்தில் தப்பிய மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.