கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். இந்த கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் ஒரு ஒற்றைக் காட்டு யானை உலா வருவதாகவும், அது கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை தொடர்ந்து சூறையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் இந்த யானை கோயில் வளாகத்திற்கு முன்புள்ள பொம்மைக் கடை மற்றும் பெட்டிக் கடைகளை உடைத்து, அங்கிருந்த பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் அப்பகுதி வியாபாரிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் உடனடியாக வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்திற்குள் தற்காலிக வனத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று அங்குள்ள வியாபாரிகள், கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.