மதுக்கரை வட்டாரத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமதி ஜெயந்திமாலா அவர்களின் பணப்பலன்களை கடந்த ஓராண்டு காலமாக வட்டார கல்வி அலுவலர் வழங்காததால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வரும் 2.1.2025க்குள் தலைமை ஆசிரியைக்குரிய பணப்பலன்களை வழங்க வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் தங்கபாசு, மாவட்டச் செயலாளர் வீராசாமி, மாவட்டத் தலைவர் ரங்கநாத மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் மரிய ஆரோக்கியநாதன், மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன், வட்டாரச் செயலாளர் மலர்வேந்தன், வட்டாரத் தலைவர் ஜெகதீஸ்வரி மற்றும் வட்டாரப் பொருளாளர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.