கோவை மருதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நவம்பர் 7 நேற்று கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் இக்கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது. சூரசம்ஹார தினத்தன்று காலை 6 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு மூலவரிடம் இருந்து வேல் வாங்கி அன்னையிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. சூரசம்ஹாரத்திற்காக சுப்பிரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் சுவாமி முறையே தாராகசூரன், பானு கோபன், சிங்கமுகசூரன், மற்றும் சூரபத்மன் ஆகிய நான்கு அசுரர்களை வதம் செய்தார். வதம் முடிந்த பின் சுப்பிரமணியசாமிக்கு கோபத்தை தணிக்கும் வகையில் மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. 10: 30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பின்னர் சுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் யானை வாகனத்தில் வீதி உலா வருவார். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழு மேற்கொண்டுள்ளனர்.