வேதாரண்யம் |

நாகை: பள்ளிக்கு தேவையான ரூ.3 லட்சம் மதிப்பிலான  பொருட்கள் சீர்வரிசை

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த கொடியாலத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு இப்பள்ளிக்கு தேவையான பொருட்களை அனைத்தையும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் சார்பில் வாங்கப்பட்டு இன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது. பள்ளியிலிருந்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது.  இதில் பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்இடி டிவி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ஆர்வோ வாட்டர் மெஷின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள், இருக்கைகள், சாக்பீஸ் உள்ளிட்ட 3 லட்சம் மதிப்பீடான பொருட்களை வீட்டுவிசேஷத்திற்கு சீராக கொண்டுபோவது போல் எடுத்துச் சென்று அசத்தியுள்ளனர். கொடியாலத்தூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சீர்வரிசை பொருட்கள் பள்ளிக்கு எடுத்துவரப்பட்டது.  பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொன்விழா கல்வெட்டு திறப்பு மற்றும் புரவலர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.

வீடியோஸ்


தமிழ் நாடு