

தாய்க்காக ஆள்மாறட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மகள்
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்தமயந்தி பள்ளியில் நேற்று (ஏப்ரல் 2) காலை ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதும் நபர்களிடம் கொடுத்து விட்டு கையெழுத்துப்பெற்றார். அப்போது அங்கு தேர்வு எழுதிய ஒரு மாணவி முகக்கவசம் அணிந்திருந்தார். சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார். நுழைவுச்சீட்டில் தேர்வு எழுதும் மாணவியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகைப்பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபர் புகைப்படம் இருந்தது. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தனித்தேர்வு) முத்துச்சாமி, தேர்வுக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப்பிரிவு அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் வருகை தந்தனர். தொடர்ந்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வாம்பிகை என்பது தெரியவந்தது. இவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரியவந்தது.