மதுரை மாநகரில் ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று உள்ள பூங்காக்களில் ஆங்காங்கே காதலர்கள் வருகை தருவர். அப்போது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து மாணவர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் போராட்டம் நடத்துவர்.
இதேபோன்று ஆதி தமிழர் பேரவை, இந்திய மாணவர் சங்கத்தினர் போன்றோர் காதலர்களுக்கு ஆதரவாக காதலர்களுக்கு இனிப்புகளை வழங்குவர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகரில் உள்ள பூங்காங்களில் காதலர்கள் வருகை தருவார்கள்.
இதனால் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி இன்று (பிப்ரவரி 14) பூங்காங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக வருகை தந்தனர். ஆனாலும் மதுரை ராஜாஜி பூங்கா, எக்கோ பார்க், சுந்தரம் பார்க் உள்ளிட்ட பார்க்களில் காதலர்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திரையரங்குகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரு காலகட்டத்தில் புறா மூலமாக தூதுவிட்டு காதலித்தது, காதல்கடிதம், டெலிபோன், இமெயில் என காதலை வெளிப்படுத்தியதோடு காதலர்தினம் போன்ற நாட்களில் நேரடியாக சந்தித்து காதலை வெளிப்படுத்தினர். ஆனால் இப்போது நேரடி சந்திப்பை தவிர்த்து வீடியோ கால் மூலம் பேசிக் கொள்வதும் உள்ளது.
இதனால் பூங்காக்கள், சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்று சந்தித்துக் கொள்வது கொண்டாடுவது என்பவை மாறியுள்ளதால் பூங்காங்கள் வெறிச்சோடியுள்ளதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர்.