மதுரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கட்டுப்பாடுகளை மீறி பேசியதாக எச். ராஜா மீது BNS 192, 196 (1ஏ), 352, 353(1ஏ) போன்ற பிரிவுகளின் கீழ் கலவரத்தை ஏற்படுத்துதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை குந்தகம் விளைவித்தல், ஒரு பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எச். ராஜாவிற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று (பிப்ரவரி 13) மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்திற்கு அவரது வழக்கறிஞர்களுடன் வருகை தந்தார். அப்போது அங்கு ஏராளமான பாஜகவினரும் வருகை தந்தனர்.
பின்னர், எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது: மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். அது தொடர்பாக நேரில் வந்து உரிய விளக்கத்தை அளித்திருக்கிறேன். மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயில் இடிப்பு பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்து ஒருவர் சிகிச்சையில் உள்ளார். இது போன்ற பணிகளை இந்த அரசு சரியாக செய்வதில்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்றார்.