
இந்திய அரசின் விருது பெற்ற மதுரை கோட்ட போக்குவரத்து கழகம்
மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளின் எரிபொருள் திறன், டயர் செயல்திறன், வாகன பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஒன்றிய அரசின் நான்கு (4) சிறந்த விருதுகளை பெற தேர்வாகியுள்ளது என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். இந்திய அரசின் சாலை போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகள் பெற்றுள்ளது. இதில் மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு 4 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. இவ்விருதுகள் மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் சார்பில் டில்லியில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி முன்னாள் ஆளுநர் டாக்டர் கிரன்பேடி அவர்களால் வழங்கப்பட்டது. பேருந்துகளின் டயர் செயல்திறன், எரிபொருள் செயல்திறன், வாகன பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன.