மதுரை மாநகரில் ரயில்வே நிலையம் எதிரேயுள்ள டவுண்ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்குவிடுதியில் தர்மராஜ் (50) என்பவர் 15 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதியன்று காலை விடுதியில் இருந்த அறை ஒன்றில் மேலாளர் தர்மராஜ் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
தர்மராஜ் உயிரிழந்த நிலையில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம், மற்றும் கழுத்தில் அணிந்திருந்த செயின் ஆகிய தங்க நகைகள் காணாமல் போனது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திடீர்நகர் காவல்துறையினர் லாட்ஜில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் ராஜஸ்தானை சேர்ந்த தனியார் துணி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியான கோபாலகிருஷ்ணன் தாகா என்ற இளைஞரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி அளித்த தீர்ப்பில் அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும் 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், இதேபோன்று பிரிவு 394 IPC யின் கீழ் 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் 5ஆயிரம் ரூபாய் அபராதமும் தவறும் பட்சத்தில் ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.