தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாரித்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:நான் தொழில் செய்வதற்காக தனியார் வங்கியில் ரூ. 39,74,523 கடன் பெற்றேன். இந்தக் கடன் தொகைக்கான வட்டி, அசலை முறையாக செலுத்தி வந்தேன். கரோனா தொற்று காலத்தில் தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், வங்கியில் பணம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நான் வங்கியில் அடமானமாக வைத்த சொத்தை ஜப்தி செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தேன். அதில், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்.20-ஆம் தேதிக்குள் ரூ.7 லட்சத்தையும், எஞ்சிய தொகையை 4 தவணைகளாகவும் வங்கியில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டது. மொத்தத் தொகையையும் செலுத்திய பிறகும் எனது சொத்து ஆவணங்களை வங்கி நிர்வாகம் திரும்ப தரமறுப்பது ஏற்புடையதல்ல. எனவே, எனது சொத்து ஆவணங்களை வழங்க வங்கி தலைமை மேலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரிடமிருந்து அடமானமாக பெற்ற அனைத்து சொத்து ஆவணங்களையும், தனியார் வங்கியின் தலைமை மேலாளர் நேரில் சென்று வழங்க வேண்டும். மனுதாரரை பழி வாங்கும் நோக்கில் செயல்பட்ட தனியார் வங்கி தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என்றனர்.