வனப்பகுதியில் வாலிபர் கொன்று புதைப்பு; நண்பர்கள் 8 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், தம்பிபட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத், (வயது 22). இவர், கேளம்பாக்கம் அடுத்த தையூர் செங்கண்மால் பகுதியில், வடிவேலு என்பவருக்கு சொந்தமான கார் டிங்கரிங் ஷெட்டில், கடந்த ஐந்து மாதமாக வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதி மாலை 5: 00 மணிக்கு, கடையில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் திரும்பி வரவில்லை. வடிவேல், அவருக்கு போன் செய்தபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மறுநாளும் அப்துல் மஜீத் கடைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வடிவேல், அப்துல் மஜீத்தை காணவில்லை என, கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்துல் மஜீத்தின் மொபைல் போன் எண்ணை வைத்து, கடைசியாக அவரை தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை போலீசார் திரட்டினர். மேலும், அவரது மொபைல் போன் தையூர் பகுதியிலேயே சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். அப்போது, அப்துல் மஜீத்தின் இருசக்கர வாகனம் தையூரில் ஒரு வீட்டில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மொபைல் போன் எண்ணில் பேசியவர்கள், பைக் வைத்திருந்த நபர் என, தையூர் பகுதியை சேர்ந்த மோகன், (30), சகாயராஜ், (20), விமல்ராஜ், (20), ராகுல், (23), சேட்டு, (23), ஸ்ரீகாந்த், (20), அபிலேஷ், (22), மற்றும் 18 வயதுடைய சிறுவர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.