காஞ்சி மாவட்ட கோயில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தமிழகம் முழுதும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோவில்களில் இலவச திருமணம் நடத்தப்படும் என்று தமிழக சட்டசபையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில், இலவச திருமணம், ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், நடத்தி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் காஞ்சிபுரம் தி. மு. க. , - - எம். எல். ஏ. , எழிலரசன், அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். திருமண ஜோடிகளுக்கு, அரசு சார்பில், 4 கிராம் தங்க மாங்கல்யம், பீரோ, கட்டில், மெத்தை உட்பட, 60, 000 ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.