காட்டுமன்னார்கோவில் அருகே இரண்டு பேர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட திருமூலஸ்தானம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று(செப்.18) அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கருணாமூர்த்தியை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே கருணாமூர்த்தியின் கடையின் அருகில் சந்தேகப்படும் படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் மேலணிக்குழி நேதாஜி நகரை சேர்ந்த சம்பத் என்பதும் இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்த மொத்த வியாபாரி என்பதும் வழக்கம் போல் கருணாமூர்த்தியின் கடைக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வந்தபோது காவல் துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பத்தை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கருணாமூர்த்தி, சம்பத் ஆகியோரிடம் இருந்த 11 கிலோ 100 கிராம் புகையிலை பொருட்களையும், ரூபாய் 6 ஆயிரத்து 450 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.