காங்கேயத்தில் மாமிச கழிவுகள் கொட்டவந்த வாகனம் சிறைப்பிடிப்பு
காங்கேயம் அடுத்துள்ள வீரணம்பாளையம் ஊராட்சி அருகே உள்ள வெள்ளரப்பாறை பகுதியில் உணவுக் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை தனியார் உணவகத்தினர் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர். இதனால் இப்பகுதிகளில் கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது என அழகே கவுண்டன் புதூர் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் அவிநாசிபாளையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் இருந்து நேற்று(செப்.18) விலையுயர்ந்த காரில் பேரலில் அடைத்து வைத்திருந்த உணவுக் கழிவுகள், மாமிச கழிவுகள், மது பாட்டில்கள் கொட்டுவதற்கு 3 உணவக ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வாகனத்தை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் அந்த வாகனத்தை வீரணம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தனர். மேலும் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.