திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, சிவன்மலை ஊராட்சியில், புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோவில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற அம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, பக்தர்கள் தரும் சிறப்பு பூஜைப் பொருளை வழிபட்டு, பின்னர் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில் வைப்பது வழக்கம். இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, ஆறுதொழுவு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப். 25 ஆம் தேதி வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கோல் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிறப்பு பூஜை பொருள் 10 நாட்களிலேயே மாறியுள்ளது.
இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் கற்பூரம் மற்றும் பிரம்பு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.