காங்கேயம்: விவசாய நிலம் பிரச்சனை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியரிடம் மனு

63பார்த்தது
காங்கேயம் நத்தக்காடையூர் பழையகோட்டைப் புதூரில் வசித்து வருபவர் ராணி. சலவைத் தொழிலாளி. அப்பகுதியில் இவருக்கு 1 ஏக்கர் விவசாய நிலத்தில் கம்பிவேலி அமைக்க முயன்றுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கம்பி வேலி அமைப்பதை தடுத்து நிறுத்தி, முழுமையாக நில அளவீடு செய்து முடித்த பின்னரே நிலத்தில் கம்பி வேலி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ராணி, மேற்கண்ட நிலத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி, காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையரிடம் மனு கொடுத்துள்ளார். அப்போது இப்பிரச்னையில் தொடர்புடைய நபர்கள், நில அளவையரிடம் நிலத்தை அளக்க விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது நிலத்தில் கம்பிவேலி அமைக்க விடாமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கேயம் வட்டாட்சியர் ஆர். மோகனனிடம் ராணி இன்று கோரிக்கை மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் மோகனன், இன்னும் 2 நாள்களில் இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த மனு கொடுக்கும் நிகழ்வின் போது, தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநில பொதுச் செயலாளர் மயில் செல்வராஜ், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ. சு. பவுத்தன், ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் குண்டடம் காளிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி