திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிபட்டியை சேர்ந்தவர் முருகேசன்(47). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(27) மற்றும் கார்த்திகேயன்(21) ஆகியோர் பெண்களுடன் தவறான சகவாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து முருகேசன் விஜயகுமார் மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் முருகேசன் வழக்கம் போல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார் அங்கு வந்த விஜயகுமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது கைகலப்பு ஏற்பட்டு அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த முருகேசன் அருகில் உள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த தகவல் தளி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் முருகேசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து புலன் விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில் முருகேசனை தற்கொலைக்கு தூண்டியதாக விஜயகுமார் மற்றும் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.