காங்கேயம் பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் பயன்பாட்டில் உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் சுகாதார வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி சாலையில் செல்கின்றது. இதே போல் திருப்பூர் சாலையில் இருந்து வரும் சாக்கடை நீரானது சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு நிரம்பி சாலையில் செல்கின்றது. இந்த கழிவு நீர் பஸ் நிலையத்தினுள் பயணிகள் நடந்து செல்லும் பாதை மற்றும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிலைய பயணிகள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதில் இருந்து வீசும் துர் நாற்றத்தால் பஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வழிந்தோடும் கழிவுநீர் குழாய் உடைப்பை மற்றும் சாக்கடை அடைப்பு ஆகியவற்றை சரி செய்யவும், பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.