சிவகங்கை: மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டன் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயிலில் விஜய தசமி திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. இக்கோயிலின் நவராத்திரி பெருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று வந்தன. விழாவின் நிறைவாக விஜயதசமி திருநாளில் அம்மனுக்கு திருமஞ்சன பொடி, மஞ்சள் பால், மாவு கரைசல், சந்தனம் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று சன்னதி சுற்றி உள்ள ஶ்ரீ விநாயகப் பெருமான் ஶ்ரீமுருகப்பெருமான் அய்யனார் சுவாமி ஶ்ரீ துர்க்கை அம்மன் ஶ்ரீ நவ துர்க்கை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்காரம் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூலவர் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனைகள் செய்து ஏக முக தீபம் மற்றும் பஞ்சமுக தீபம் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து நவதானியங்கள் கொண்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை அம்மன் சன்னதி முன்பு வைத்து பெண்கள் கும்மி பாடல்கள் பாடி சுற்றி வந்தனர். நிறைவாக அம்மனுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகிஷாசுரமர்த்தினி அம்மனை வழிபட்டனர்.