சிவகங்கை அருகே மதகுபட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மலையாண்டி மகள் மோனிஷா(21). இவர் சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரை, சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த உறவினர் ஆகாஷ்(24) என்பவர் காதலித்து வந்தாராம். இந்நிலையில், இவரது காதலை பெண் வீட்டார் ஏற்கமறுத்து விட்டதாகக்கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை மதகுபட்டிக்கு வந்த ஆகாஷ், மோனிஷா வீட்டுக்குச்சென்று பெண் கேட்டாராம். அதற்கு பெற்றோர் மறுத்துவிட்டதுடன், அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், திரும்பி வந்து, வீட்டில் தனிமையில் இருந்த மோனிஷாவை பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த மோனிஷா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷ் தானும் பாட்டிலால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அங்கு சென்ற மதகுபட்டி போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துஇன்று மதியம் சுமார் மூன்று மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.