நாடு முழுவதும் தசரா பண்டிகை காலத்தில் நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக கொலு வைத்து கொண்டாடுவது என்பது வழக்கமாக உள்ளது. அதில் கடவுள் உருவங்கள், விலங்குகள், மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் சுடுமண் பொம்மைகளை படிக்கட்டுகளில் காட்சிப்படுத்தி கொண்டாடுவர். அத்தகைய பண்பாட்டினை அடிப்படையாக வைத்து சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவர்கள் தங்கள் பாடம் சார்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள், மற்றும் உருவமாதிரிகளை வீட்டிலுள்ள பழைய அட்டைகள், களிமண் பொருட்களை கொண்டு உருவாக்கி கல்விக் கொலுவாக காட்சிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து பள்ளியின் கலைத்திட்ட இயக்குநர் கங்கா கார்த்திகேயன் கூறியதாவது,
வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கல்விக்கொலு பற்றிய வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மூலமாக வழங்கினோம். அதன்படி தாங்கள் உருவாக்கிய கலைத்திறன் பொருட்களை பள்ளிக்கு கொண்டுவந்தனர். தாங்கள் படிக்கும் பாடங்களிலுள்ள மன்னர்கள், தலைவர்கள், கதைமாந்தர்கள் மற்றும் அறிவியல் சாதனங்கள், மலர்கள், கணிதக்குறியீடுகள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றை உருவமாதிரிகளாக தயாரித்து வந்து படிக்கட்டுகளில் அடுக்கி வைத்துள்ளனர்.
மாணவச்செல்வங்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்றார்.