சிவகங்கை: வீட்டை உடைத்து திருட திட்டம் தீட்டிய ஐந்து பேர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேதியேந்தல் கிராமம் விளக்கு ரோட்டில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் மார்ட்டின் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது காவலர்களைப் பார்த்ததும் 5 பேர் ஓடினர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்த போது அவர்களிடம் இருந்து இரண்டு அரிவாள்கள், மிளகாய் பொடி, சுருக்கும் போடுவதற்குக் கயிறு, உளி கையுறைகள், இரும்பு பைப் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஒவ்வொருவரின் மீதும் காவல் நிலையத்தில் மூன்று அல்லது நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் தங்கள் மீது இருக்கும் வழக்குகளை நடத்துவதற்காக வீட்டை உடைத்து திருடுவதற்குத் திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்ட மானாமதுரை அருகே உள்ள முருகபாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், தங்கமணி, ஆதிநாராயணன், மதன்குமார், அஜித்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.