தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200/-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300/-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400/-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600/- வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72, 000 (எழுபத்தி இரண்டாயிரத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ/மாணவியருக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்