ஏற்காட்டில் இருந்து தலைச்சோலை கிராமத்திற்கு பஸ் சேவை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் தலைச்சோலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தலைச்சோலையை சுற்றி செங்காடு, பாசிப்பள்ளம் போன்ற 5 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அன்றாட வேலைக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்ல வேண்டும் என்றால் ஏற்காட்டிற்கும், சேலத்திற்கும் செல்ல வேண்டும். ஆனால் தலைச்சோலை கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் கிராம மக்கள் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் அல்லது கார்களில் சென்று வந்தனர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கியும் அவர்களுக்கு பயன் இல்லாமல் இருந்தது. இதுதவிர, பள்ளி செல்லும் குழந்தைகளை தினமும் தனியார் வாகனங்களில் பெற்றோர்கள் அனுப்பி வைத்து வந்தனர். இதனால் ரூ. 1, 000 முதல் ரூ. 2 ஆயிரம் வரை தனியார் வாகனங்களுக்கு கட்டணமாக கொடுக்கப்பட்டது. எனவே, தலைச்சோலை கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏற்காட்டில் இருந்து தலைச்சோலை கிராமத்திற்கு பஸ் சேவை தொடங்கியுள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கை நிறைவேறியதால் தலைச்சோலை கிராம மக்கள் புதிய பஸ்சுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.