
சேலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மூதாட்டி பலி
சேலம் அயோத்தியாப்பட்டணம் ரேவதி ரைஸ்மில் பகுதியை சேர்ந்த ரங்கன் மனைவி சித்தாயி (வயது 70). இவர் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக சித்தாயி நடந்து சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியில் எதிர்பாராமல் சித்தாயி மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட சித்தாயி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மின்துறை மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சித்தாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.