சேலம்: வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு டி.ஐ.ஜி. உமா அறிவுரை
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கான குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தலைமை தாங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, சோமசுந்தரம், பாலகுமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தேன்மொழிமேல், ராஜா, ஆரோக்கியராஜ், சதீஷ்குமார், சஞ்சீவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி. உமா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அதிக கவனம் செலுத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் குற்றவாளிகளுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை பெற்று கொடுப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். அதேபோல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் பிற மாநில குற்றவாளிகளை கைது செய்வதில் போலீஸ் துறையின் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் அந்த குற்றவாளிகளின் வழக்கை விரைந்து நடத்தி கோர்ட்டு மூலம் உரிய தண்டனை பெற்று கொடுக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.