சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு சஷ்டி விழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை மூலவர் மற்றும் உற்சவமூர்த்தியான வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு பின்னர் வேதங்கள் முழங்க முருக பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு 22 ஆம் ஆண்டாக மகா கந்த சஷ்டி பாராயணம் செய்தனர். சூரசம்ஹார தினமான இன்று முருகப்பெருமானை தரிசிக்க காலை முதலே அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முருகனை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது விழா ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.